முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், இரு மாநில அரசுகளும் வெளியில் இருக்கும் அரசியல் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேரள அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசை பொறுத்த வரை முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் தனி நபர்களும் 2, 3 பேர் உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் கடந்த வாரம் கேரளாவில் மழை அதிகரித்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதிகமாக நீர்வரத்து இருந்ததை காரணம் காட்டி தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று இரவோடு இரவாக வினாடிக்கு 12,200 டிஎம்சி தண்ணீரை இரண்டு நாட்களுக்கு முழுமையாக திறந்து விட்டுள்ளது. இதனால் அந்த பகுதியிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இதுப்போன்று தமிழக அரசிற்கு முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்துவிட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசின் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அனைத்து முன்னறிவிப்புகளும் கொடுத்துவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 12,200 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுவது என்பது 1.30 மணி நேரம் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடுவதன் அளவு குறைந்துள்ளது. எனவே கேரளா அரசு கூறும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை பொறுத்தவரை, ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பது, பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து கேரள அரசு இதுபோன்ற இடைக்கால மனுக்களை தாக்கல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கண்டித்தனர்.
தண்ணீர் திறந்துவிடுவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றால் மேற்பார்வை குழுவிடம் தான் சென்று முறையிட வேண்டும். அவர்கள் தான் தண்ணீர் திறந்துவிடுவது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்ய கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று தமிழக அரசும் முல்லை பெரியாறு விவகாரத்தில் தொடர்ந்து இடைக்கால மனுக்களை தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
