பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தது என விருதுநகரில் அரசு நலத்திட்ட விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பக்கத்து மாநிலங்கள் எல்லாம் அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுகின்றன. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் பாதிப்பு இல்லாமல் தேக்கி வைத்திருக்கிறோம். 

ஆனால் பழமை வாய்ந்த சுண்ணாம்பு கல்லால் கட்டப்பட்ட முக்கொம்பு அணை பலரின் கண் திருஷ்டியால் உடைந்துவிட்டது. முக்கொம்பு அணை உடைப்பால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முக்கொம்பு அணை உடைப்பால் எந்த பாதிப்பும் இல்லை. 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருப்பதால் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு இல்லை என பேசினார். அமைச்சரின் இந்த கண் திருஷ்டி பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் அலுவலகத்தில் ஒரு கோப்பு கூட தேங்குவதில்லை. மேலும் மேட்டூர் அணையில் வண்டல் மண்ணை எடுக்க அனுமதி வழங்கும் வகையில் எந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மண்வெட்டியால் வெட்டினாரோ தெரியவில்லை... அவரின் காலடி பட்டநேரத்தில் அந்த அணை 86  ஆண்டுகளுக்கு பிறகு 4 முறை நிறைந்துள்ளது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்கள் இதுபோல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.