சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்டவர்.
தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர். 

கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.

கடந்த 4  மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்.

ஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.

கடந்த 100 நாட்களுக்கு மேலாக முகிலனை தேடியும் கிடைக்காததால் அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் முகிலன் திருப்பதியில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் அவரை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் ஆந்திர போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.