அம்பானியின் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்நது பல  சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அந்த காங்கிரஸ் கட்சியுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வைத்துள்ளது.

அம்பானி குழுமங்கள் குறித்து திமுகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் சென்னையில் திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து முகேஷ் அம்பானி தனது மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம்  வழங்கினர். திருமணம் வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

ஆகாஷ் அம்பானி – ஷோல்கா மேத்தா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். தொழிலதிபர் ரசல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள் தான் ஷோல்கா மேதா.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இஷா அம்பானிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.