காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்கும் விவகாரத்தில் தெளிவாக முடிவெடுக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை குழப்பிவரும் திருநாவுக்கரசருக்கு மூக்குடைப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடம் திடீரென தலையிட்டு எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் காங்கிரஸ் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு கூடும் சிறப்பு சட்டப் போவைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

இதில் எடப்பாடிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கினறனர். அவருக்கு எதிராக திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்காமல் கலைந்து சென்றனர். இன்றுதான் முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி திமுக எடுக்கும் நிலைபாட்டை ஆதரிக்க வேண்டும் என கட்டளையிட்டும் தொடர்ந்து குழப்பமான கருத்தை திருநாவுக்கரசர் கூறிவந்தது காங்கிரஸ் மேலிடத்தை எரிச்சலடைய செய்தது. இதையடுத்து நேரடியாக மேலிட பொறுப்பாளர் மூலம் காங்கிரஸ் மேலிடம் தனது முடிவை அறிவித்துள்ளது.

 காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என அறிவித்தார்.

இது திருநாவுக்கரசருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.