பாஜக வுடன் கூட்டணி அமைப்பதற்காக, ஸ்டாலினை வம்புக்கு இழுப்பதா? என்று அன்புமணி ராமதாஸுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க தயங்குவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 25 ம் தேதி, திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்கு, தாம் இழைத்த துரோகங்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் திமுக, இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா? என்று அன்புமணி அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், யாருடைய மிரட்டலுக்கு பயந்தோ, அன்புமணி தமது அறிக்கை மூலம் ஸ்டாலினை வம்புக்கு இழுத்துள்ளார். விவசாயிகள் பற்றியோ, கடந்த ஆட்சி காலங்களில் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட, இலவச மின்சாரம் உள்ளிட்ட நலத்திட்டங்கள், தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்கள் எதுவும் அவருக்கு தெரிய வில்லை என்று கூறி உள்ளார்.

மேலும், திமுக நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி அடைந்ததை பொறுத்து கொள்ள முடியாத அன்புமணி, ஆத்திரத்தில் ஸ்டாலினையும், திமுகவையும் தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்.

திமுகவை இந்த அளவுக்கு வம்புக்கு இழுக்கும் அன்புமணி, நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றமே உத்தரவிட்டும், அதை ஏற்காத பாஜக தலைமையிலான மத்திய அரசை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காமல் பயந்து, ஒதுங்கி இருப்பதன் மர்மம் என்ன?

தங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவும்,, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்காகவும், திமுகவையும், அதன் செயல் தலைவரையும் குறை கூறுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

ஒரு ஊழல் வழக்கிற்காக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனை, தயவு செய்து டெல்லியில் அடகு வைக்காதீர்கள் என்று கேட்டு கொள்வதாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.