கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் குடும்பத்தினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். 

கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவில்;- கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான, அன்புச் சகோதரர் வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய புதல்வர் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் விசாரித்தறிந்தேன். வசந்தகுமார் எம்.பி. அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.