திருச்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருநாவுக்கரசர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார். தமிழ்நாட்டில் டெங்கு பரவி வருவதை அரசு தடுக்க வேண்டும் என்று கூறிய அவர் நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கும் நிலையில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது துரதிர்ஷ்டமானது  என்று கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற திருநாவுக்கரசர், அவர் மந்திரியாக பேசுவதைக் காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும் என்றார். மேலும் ராஜேந்திரபாலாஜி பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தேர்தலுக்காக இடதுசாரி கட்சிகள் யாரிடமும் பணம் வாங்கி இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் இடைத்தேர்தலில் அவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.