MP salary will hike...
எம்.பி.க்களின் ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என, நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
7-வது ஊதியக்குழு
இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக சபாநாயகர் வெங்கையா நாயுடு உறுதி அளித்தார்.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது,. இதன் அடிப்படையில் நீதிபதிகளுக்கும் ஊதியம் உயர உள்ளது.
ஊதியத்தை உயர்த்துக
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை தலைவர் நரேஷ் அகர்வால் எம்.பி.க்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் பேசினார்.

அவரது இந்த கோரிக்கைக்கு மற்ற எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். இது குறித்து அவர் மாநிலங்களவையில் கூறியதாவது-
ஒரு ரூபாய் அதிகமாக..
‘‘முன்னாள் எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் கூடிய நாடாளுமன்ற குழு எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து அறிவுறுத்தி இருந்தது.
7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்திருந்தது. எம்.பி.க்களுக்கான ஊதியம் அமைச்சரவை செயலாளரை விட ஒரு ரூபாயாவது அதிகம் வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள்
எம்.பி.க்களை விட பத்திரிகையாளர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகவும் எனவே அவர்களின் விமர்சனம் பற்றி கவலைப்படவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் வெங்கையைா நாயுடு, இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும் இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சம்பளம்
தற்போது எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ. 50,000 . இது தவிர இதர படிகளாக அவர்கள் மாதம் ரூ. 45,000 வரை பெறுகின்றனர்.
இந்த ஊதியத்தை அவர்கள் இரண்டு மடங்காக உயர்த்த வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
