MP Maithreyan was prompted by Nanjil Sampath

’இடைச்செருகல்’_ இந்த வார்த்தைதான் மைத்ரேயனை எடப்பாடியின் அரசு மீது ‘தானாக கவிழப்போகும் அரசு’ என்று ஆக்ரோஷமாக விமர்சிக்க ட்தூண்டியிருக்கிறது. அந்த தூண்டலை உருவாக்கியவர் நாஞ்சில் சம்பத். 

அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் தெரிந்தது இரண்டு அணி. ஆனால் மூன்றாவது ஒரு அணியும் இருக்கிறது. அது நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி இருவர் மட்டும் நடத்தும் ‘தினரன் அணி’. 

’வள்ளலே, வானமே, வாழும் அம்மாவே, தியாகமே, அகல் விளக்கே, அண்ணனே’ என்று நாஞ்சில் சம்பத் இதுவரை தான் கற்றுவைத்த வித்தையை எல்லாம் காட்டி குனிந்து வணங்கி விசுவாசம் காட்டுவது தினகரனிடம்தான். தினகரனை தூக்கி நிறுத்துவதற்காக பன்னீர்செல்வத்தை எந்தளவுக்கும் இறங்கியடிக்க தயாராக இருக்கிறார் நாஞ்சில்.

அந்த வகையில் சமீபத்தில் ‘இரண்டு அணிகளையும் இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. பச்சை துரோகம் செய்த பன்னீரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு இந்த கட்சியை நடத்த வேண்டுமா? டெல்லி ஏகாதிபத்தியத்தின் காலில் விழுந்து கட்சியை காட்டிக் கொடுத்த அவரை ஏன் தாங்க வேண்டும்? அந்த இடைச் செருகலை எடுத்து ஏன் மீண்டும் செருக வேண்டும்?” என்று போட்டுப் பிளந்திருந்தார். 

இந்த வார்த்தைகள்தான் பன்னீர் அணியை கடுப்பேற்றி கர்ஜிக்க வைத்துவிட்டனவாம். நேற்று கட்சிக்கு வந்தவர், அம்மாவின் வாழ்நாள் விசுவாசியான பன்னீரை பார்த்து ‘இடைச்செருகல்’ என்பதா என்று கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். 

நாஞ்சில் தானாக இப்படி பேசினாரா அல்லது அமைச்சர்கள் சிலர் இப்படி அவரை பேச வைத்திருக்கிறார்களா? என்பதே அவர்களின் டவுட்டு. சசியையும், தினகரனையும் கட்சியிலிருந்து விலக்கி வைத்துவிட்டதாக எடப்பாடி தரப்பு சொல்வதை பன்னீர் கோஷ்டி நம்பவேயில்லை. நாஞ்சிலும் மறைமுகமாக அமைச்சர்களின் ஆதரவிலேயே தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இருக்கிறார் என்று எண்ணுகிறது பன்னீர் தரப்பு. 

இந்த கடுப்பில்தான் மைத்ரேயன் ‘எடப்பாடியின் ஆட்சியில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. மாநிலமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, அதை கவனிப்பார் இல்லை. இந்த அரசு தன் செயல்களால் தானாகவே கவிழும்.’ என்று போட்டுத் தாக்கி இருக்கிறார் என்றே தகவல். 

பன்னீருக்கு எதிராக நாஞ்சில் போன்றோரின் வார்த்தைகள் வீரியமெடுத்தால் ஆட்சிக்கு எதிராக பன்னீர் அணியினரின் விமர்சனங்கள் விஸ்வரூபமெடுக்கும் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்களாம்.