நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ரஜினியுடன் பேசிப் பார்க்கலாம் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் யோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது அண்மையில் கட்சி ஆரம்பித்த தினகரனுடன் பேசலாமா என்று ராகுல் காந்தி யோசித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்குபவர்களுடன் தான் தமிழகத்தில் கூட்டணி என்றும் ராகுல் பிடிவாதம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை காங்கிரசுக்கு 10 தொகுதிகள் கொடுத்தாலே அதிகம் என்று ஒரு பேச்சு உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு முன்வந்தால் 15 தொகுதிகளை லம்பாக கொடுக்க தினகரன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ப.சிதம்பரம் தரப்பில் இருந்து ராகுலுக்கு புதிதாக ஒரு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதாவது ரஜினி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா? புறக்கணித்துவிடலாமா என்கிற எண்ணத்தில் உள்ளார்.

மேலும் ரஜினி பா.ஜ.கவை ஆதரிக்கப்போவதில்லை என்றும் ப.சிதம்பரம் திட்டவட்டமாக நம்புகிறார். எனவே அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களால் நாடு முழுவதும் ராகுலின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே காங்கிரசுடன் கூட்டணிக்கு வருமாறு ரஜினியிடம் பேசிப்பார்க்கலாம் என்று ப.சிதம்பரம் ராகுலுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் கடந்த ஒரு மாதத்தில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் இரண்டு முறை ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரஜினியின் மன ஓட்டத்தை தெரிந்து கொண்டு தியாகராஜன் ப.சிதம்பரத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை மனதில் வைத்தே ரஜினியுடன் கூட்டணி என்கிற ஒரு யோசனை ப.சிதம்பரத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தி.மு.கவை பொறுத்தவரை ப.சிதம்பரத்திற்கு தற்போது நல்ல உறவு இல்லை. அதிலும் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் பெரிய அளவில் நெருக்கம் காட்டுவதில்லை. எனவே ப.சிதம்பரம் ரஜினி மூலமாக தமிழகத்தில் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினியும் – ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய ப.சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சிக்கு தென்மாவட்டங்களில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும் ரஜினியின் ஆதரவும் அப்போது ப.சிதம்பரத்திற்கு இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. எனவே ப.சிதம்பரம் கூறும் யோசனையை ரஜினியும் காது கொடுத்து கேட்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.