தி.மு.க – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட வழக்கம் போல் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான ஈகோ யுத்தம் தான் காரணம் என்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் தயாராக இருந்தார். 51 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி என்று விஜயகாந்த் விதித்து நிபந்தனைகள் தான் பிரச்சனைக்கு காரணமானது. ஆனால் இந்த பிரச்சனை குறித்து ஸ்டாலின் – விஜயகாந்த் நேரில் அமர்ந்து பேசினால் சரியாகிவிடும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது ஸ்டாலின் தனது கட்சி அலுவலகமாக கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்தார். இதனால் ஏற்பட்ட ஈகோவை தொடர்ந்து தான் பேச்சுவார்த்தை முறிந்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரேமலதா, வைகோ மூலமாக வாங்கிக் கொள்ள வேண்டியதை நடராஜனிடம் இருந்து வாங்கிக் கொண்டு மக்கள் நலக்கூட்டணிக்குள் நுழைந்தார்.

கிட்டத்தட்ட இதே போன்று ஒரு நிலை தான் தேமுதிக –திமுக இடையிலான தற்போதைய இழுபறிக்கு காரணம் என்கிறார்கள். திமுக கொடுக்க விரும்புவதை விட கூடுதலாக கொடுக்கவே அதிமுக தயாராக உள்ளது. ஆனால் விஜயகாந்த், பிரேமலதா என அனைவருமே திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளனர். ஆனால் ஸ்டாலின் – பிரேமலதா இடையிலான ஈகோ பிரச்சனை தற்போது கூட்டணிக்கு முட்டுக்கட்டையாகியுள்ளது.

3 பிளஸ் 1 என ஸ்டாலின் ஆஃபர் கொடுத்துவிட்ட நிலையில் அறிவாலயத்திற்கு சுதீஷ் உள்ளிட்டோர் வந்து பேசினார் மேலும் ஒரு தொகுதி கொடுப்பது பற்றி பரிசீலிக்க திமுக தயார் என்கிறார்கள். ஆனால் தாங்கள் ஒரு போதும் அறிவாலயத்திற்கு வரமாட்டோம் முதலில் திமுக தான் துரைமுருகன் தலைமையில் தங்கள் குழுவை எங்கள் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேமலதா கூறி வருகிறார்.

ஆனால் திமுக எந்த காலத்திலும் அறிவாலயத்தை தாண்டி வெளிப்படையாக கூட்டணி குறித்து எந்த கட்சியுடனும் பேசியதில்லை. மேலும் தற்போது ஸ்டாலின் தலைவராகியுள்ள நிலையில் அந்த மரபை மாற்ற திமுகவும் தயாராக இல்லை. இப்படித்தான் உப்பு சப்பில்லாத விஷயத்தால் திமுக – தேமுதிக கூட்டணி அமைதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இதனை சரி செய்ய சபரீசனும் – சுதீசும் தற்போது வரை தீவிரமாக பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.