நேற்று வரை சட்டப்பேரவையில் தான் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

உதயநிதி திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உடனேயே அவருக்கான முக்கியத்துவம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் உதயநிதியை நேரிலேயே சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது தவிர தினமும் ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் நிர்வாகிகள் சென்னை வந்து உதயநிதிக்கு சால்வை அணிவித்து செல்கின்றனர்.

திமுக அடுத்த தலைவர் உதயநிதி தான் என்பதை உறுதிப்படுத்ததான் இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. இதனிடையே உதயநிதிதான் திமுகவின் அடுத்த தலைமுறை தலைவர் என்பதற்கு தற்போதே கட்டியம் கூறும் வகையில் சட்டமன்றத்தில் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. மானியக் கோரிக்கைகள் மீது பேசும் எம்எல்ஏக்கள் சிலர் தவறாமல் கலைஞர், ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது போல் உதயநிதிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றனர்.

இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்தது வைரலானது. சட்டப்பேரவையில் தான் திமுக எம்எல்ஏக்கள் இப்படி அட்ராசிட்டி செய்கிறார்கள் என்றால் திமுக எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார். தென்காசி தொகுதியின் திமுக எம்பி தனுஷ்குமார் நேற்று முதல் முறையாக மக்களவையில் பேசினார். அவருக்கு பேச 2 நிமிடங்கள் தான் கொடுக்கப்பட்டன.

அந்த 2 நிமிடங்களிலும் அவர் கலைஞருக்கு கூட நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தது தான் நாடாளுமன்றத்தில் இருந்த மற்ற திமுக எம்பிக்களையே அதிர்ச்சி அடைய வைத்தது. என்னை இந்த நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உதவிய திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கு நன்றி என்று தனுஷ்குமார் கூறித்தான் தனது உரையை தொடங்கினார்.

தனது முதல் உரையில் மத்திய அரசு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கும் பண உதவி குறித்து சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தார். ஆனால் அவர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து பேசியதால் அவரது மற்ற பேச்சுகள் எடுபடாமல் போய்விட்டது. என்ன தான் உதயநிதி மூலமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் நாடாளுமன்ற மக்களவைக்கு சென்று அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமா? என்று கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.