பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  வகித்து வந்த மாவட்டச் செயலாளர்பதவி பறிக்கப்பட்டதும் அவரது பதவி அடுத்து யாருக்கு என்கிற எதிர்பார்பு எகிறியடித்தது. 

இந்நிலையில், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சருமான மாஃபா.பாண்டிய ராஜன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் பலமாக அடிபடுகிறது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் வந்தபோது, கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய தீவிரத்தால் இந்த மாவட்டத்திலிருந்தே ஓரம் கட்டப்பட்டார். தர்மயுத்தம் நடத்தியபோது ஓ.பி.எஸ். ஆதரவு நிலை எடுத்த தன்னை, பெயரளவுக்கே அமைச்சராக்கி இருக்கிறார் எடப்பாடி என்னும் ஆதங்கத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் விருதுநகர் மா.செ. பதவி தன்னைத் தேடிவரும் எனக் காத்திருக்கிறார். 

அதுமட்டுமல்ல... கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமிருந்து அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டு, ஆவின் அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பு தனக்கு வந்துசேர வேண்டும் என எதிர்பார்க்கிறார் மஃபா பாண்டியராஜன். அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் பலத்த சிபாரிசு தனக்கிருப்பதாகச் சொல்லி வருகிறார், முன்னாள் சிவகாசி எம்.எல்.ஏ.வான பாலகங்காதரன். கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தும், அவரை மீறி திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை தலைமையிடமிருந்து பெற்ற தினேஷ்பாபுவும் இப்பட்டியலில் உள்ளார். முன்னாள் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகை செல்வனும் நம்பிக்கையோடு இருக்கிறார். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் பெயர் அடிபட்டாலும், ராஜவர்மனை மாவட்டச் செயலாளர் ஆக்கினால், அது கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சாதகமாகிவிடும் எனவும் கருதுகிறது தலைமை. 

எது எப்படியோ, விருதுநகர் மாவட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அவரால் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களைத்தான் மாவட்டச் செயலாளர்கள் ஆக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம், எடப்பாடி. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மெஜாரிட்டியாக உள்ள முக்குலத்தோர், நாயக்கர் மற்றும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான தினேஷ்பாபு, பாலகங்காதரன், பாண்டியராஜன் ஆகியோரில் இருவரே மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்படுவார்கள் என்கிறது ஆளும்கட்சி தரப்பு.

கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராகக் கச்சை கட்டி நிற்கும் மூத்த அமைச்சர்களும், அவரை ஒரேயடியாக வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளார்கள். அதனால்தான், விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கும், ஆவின் அமைச்சர் பொறுப்புக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. நடக்கும்போது பார்த்து கொள்ளலாம் என சட்டை காலரை தூக்கி விட்டு தனது ஆதரவாளர்களிடம் கெத்து காட்டி வருகிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி.