அடுத்தடுத்து பரோட்டா சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் மரணம்.. தொடர்கிறதா குளிர்பானம் பலி.?
கோவில்பட்டியில் பரோட்டாவையும் குளிர்பானத்தையும் அடுத்தடுத்து உண்ட தாயும் மகளும் உயிரிழந்ததாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர், லாரி ஓட்டுநர் இளங்கோவன். இவருடைய மனைவி கற்பகமும்(33), மகள் தர்ஷினியும் (7) நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர் இருவரும் வீட்டின் அருகே கடையில் குளிர்பானம் வாங்கி குடித்திருக்கிறார்கள். இருவரும் வீட்டுக்குத் திரும்பிய நிலையில் கற்பகமும், தர்ஷினியும் திடீரென மயங்கி விழுந்தனர். வீட்டின் அருகே இருந்தவர்களும் உறவினர்களும் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடனே அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து உறவினர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். ஆனால், அதற்குள் கற்பகமும், தர்ஷினியும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். பரோட்டா கடையிலும் குளிர்பானம் வாங்கிய கடையையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். உணவு மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
தாய். மகள் இருவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர்களுடைய மரணத்துக்கு என்ன காரணம் என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னையில் அண்மையில் சிறுமி ஒருவர் குளிர்பானம் குடித்த பிறகு, சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இதேபோல குளிர்பானம் குடித்த சிறுவன் ஒருவன் ரத்த வாந்தி எடுத்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில் கோவில்பட்டியிலும் பரோட்டாவையும் குளிர்பானத்தையும் அடுத்தடுத்து எடுத்துக்கொண்ட தாயும் மகளும் பரிதாபமாக உயிரிந்துள்ளனர்.