பிரதமர் மோடி, பேஸ் புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் அத்தனையிலும் ஆர்வம் கொண்டவர். அன்றாட நிகழ்வுகள் தொடர்பான தனது கருத்துக்களை அதில் அவர் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவரை உலக அளவில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பொறுத்தமட்டில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை நேற்று 3 கோடியை தாண்டியது. இதன்மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவையும் பின்னுக்கு தள்ளினார்.

அது மட்டுமல்ல, உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின் தொடரப்படுகிற தலைவர்களில், முதல் இடத்துக்கு மோடி வந்து உள்ளார்.

இது அவரது புகழுக்கும், இளையதலைமுறையினருடன் கொண்டுள்ள தொடர்புக்கும் சான்றாக அமைகிறது என பாரதீய ஜனதா கட்சி செயல் தலைவர் ஜே.பி. நட்டா, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை 2 கோடியே 56 லட்சம் பேரும், ஒபாமாவை 2 கோடியே 48 லட்சம் பேரும், டிரம்பை 1 கோடியே 49 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

ஒரு மாதத்துக்கு முன்னர்தான் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது நினைவுகூரத்தக்கது.