கொரோனா அச்சம் எதிரொலியாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது , சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது .  சீனாவில் மிகப்பெரிய அளவில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த  நோய் இத்தாலி , அமெரிக்கா ,  தென்கொரியா உள்ளிட்ட  நாடுகளை தீவிரமாக தாக்கி வருகிறது .  

இந்நிலையில் சர்வதேச அளவில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன .  இந்தியாவும் இந்த வைரசிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .  மக்கள் கூடும்  நிகழ்ச்சிகளையும் ,  தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு  மருத்துவமனைகளில்  சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும்  தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,   ஹாங்காங் ,  குவைத் செல்லும் விமானங்களை ஏர் இந்தியா ,  இண்டிகோ ,  குவைத் ஏர்வேஸ் ,   கதே பசிபிக் உள்ளிட்ட நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன . 

 

இந்த வைரஸால் சுமார் 1 லட்சத்து 10ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அமெரிக்கா, இத்தாலி  உள்ளிட்ட நாடுகளில் இறப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில்  சீனாவில் மட்டும் 3119 பேர் உயிரிழந்துள்ளனர்.  சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது . கொரோனா தீவிரமாக உள்ள  குவைத் ,  ஆங்காங் ,  இத்தாலி ,  ஈரான் ,  உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 40  சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  அதேபோல் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.