சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 4 லட்சம் பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவிவிலக கோரி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி மூண்டது. அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடந்துவருகிறது. 

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவிவிலக வலியுறுத்தும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும் தனது படைகளை கொடுத்து உதவுகிறது. இதனால் சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

சிரிய-ரஷ்ய கூட்டுப்படை இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்துவதும், கிளர்ச்சியாளர்களும் அமெரிக்க படையும் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்துவதும் என இவர்கள் செய்யும் அட்டூழியத்தில் அப்பாவி பொதுமக்கள் இறந்து மடிகின்றனர்.

இதுவரை குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் 4 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிருக்கு பயந்து எங்கேயாவது ஓடி மறைந்தால் அங்கும் தாக்குதல் நடத்தப்பட்டும் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இந்த போரை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது. சௌதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளும் வலியுறுத்துகின்றன. ஆனால் இதை பற்றியெல்லாம் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் கவலைகொள்ளவில்லை. 

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையேயான போட்டியையும் பகையையும் சிரியாவின் மூலமாக தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் இவர்களின் அரசியலுக்கும் போட்டிக்கும் பகைக்கும் அப்பாவி சிரிய மக்கள் பலியாகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ், கவுடா ஆகிய நகரங்களில் கடந்த 5 நாட்களாக சிரியா-ரஷ்யா கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த 5 நாள் தாக்குதலில், 90 குழந்தைகள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

தாக்குதலுக்கு பயந்து மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் தவித்துவருகின்றனர். தாங்கள் தஞ்சமடைந்துள்ள இடத்தில் கழிவறை வசதி கூட இல்லாமல் பெண்கள் தவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. அதனால் தாக்குதல்கள் தொடரும் என கருதப்படுகிறது. இன்னும் எத்தனை குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவிக்கப்போகிறார்களோ?