தமிழக அரசியலின் சமீபத்திய ஆச்சரியம் என்றால் அது டி.டி.வி. தினகரன் தான். ‘ஏன் தான் இந்தாளை எல்லாருக்கும் பிடிக்குதுன்னே தெரியலையே?’ என்று அ.தி.மு.க.வில் மட்டுமில்லாது, தி.மு.க., தே.மு.தி.க. என்று கிட்டத்தட்ட எல்லா கட்சிகளிலும் புலம்பல் கேட்பது யதார்த்தம். அந்தளவுக்கு ஒரு கரிஷ்மேடிக் ஃபிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தினா. 

எவ்வளவு கடுப்பாய் கேள்வி கேட்டாலும், எவ்வளவு பெரிய சரிவை சந்தித்தாலும் முகத்தில் கோபத்தையோ, எரிச்சலையோ காட்டாமல், சிரித்தபடியே எல்லோரையும் எதிர்கொள்வதுதான் தினகரனின் இவ்வளவு பெரிய எழுச்சிக்கு ஒரே காரணம்.’ என்று விமர்சகர்கள் விளக்கம் கூறினர். ஆனாலும் அ.தி.மு.க.வினர் என்னவோ ’எங்க ஒருங்கிணைப்பாளர்களும்தான் நிருபர்கள் என்ன கேட்டாலும் கோபப்படுறதில்லை. விபூதி, பொட்டுன்னு வெச்சு பாந்தமாகதான் இருக்கிறாங்க பார்க்கிறதுக்கு. ஆனாலும் எந்த ஈர்ப்பும் இல்லையே. ஆனால் தினகரனால் மட்டும் எப்படி இது சாத்தியமாகுது? அதை மறுத்துப் புலம்புவதும் வாடிக்கையாக இருந்தது. 

இந்நிலையில்  தினகரனின் இந்த திடீர் எழுச்சிக்கு காரணம் மூக்குப்பொடி சித்தரின் ஆசீர்வாதமே! என்று ஒரு பரபரப்பு கிளம்பியது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலோ அல்லது அங்கிருக்கும் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்திலோ அமர்ந்திருப்பார்  இந்த மூக்குப்பொடி சித்தர். இவருக்கு தமிழக டி.ஜி.பி, புதுவை துணை நிலை ஆளுநர் என்று பெரிய வி.ஐ.பி.க்கள் பலர் பக்தர்கள். இந்த மூக்குபொடி சாமியார்தான் சமீபகாலமாக தினகரனை தாறுமாறாக ஆசீர்வதிக்கிறார், அந்த வகையில்தான் தினகரனின் வளர்ச்சி பெரியளவில் இருக்கிறது! என்று அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளே கிசுகிசுத்தனர். 

இதை மெய்ப்பிக்கும் விதமாக தினகரனும் ஆன்னா ஊன்னா திருவண்ணாமலைக்கு போவதும், மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி வாங்குவதும் வழக்கமாக இருந்தது. பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் தினகரனுக்கு சரிவு நேரும், அதன் பின் சில மாதங்களில் பெரும் ஏற்றத்தை சந்திப்பார் அரசியலில் ஜோதிடம் சொன்னதாம். இதையடுத்து மூக்குப்பொடி சித்தரை வணங்க சென்ற தினகரனுக்கு, அவர் காட்டிய சமிஞைகளும் அதை உறுதிப்படுத்தியதாம். அதனால்தான் இவ்வளவு பெரிய அடிக்கு பிறகும் அமர்க்களமாய் அரசியல் செய்து கொண்டு திரிந்தாராம் தினா. எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் ஏகப்பட்ட அரசியல் அதிரடிகளுக்கு தினகரன் பிளான் செய்து வைத்திருக்கிறார். இவை அத்தனையும் அலுங்காமல் நிறைவேறிட மூக்குபொடி சித்தரின் ஆசீர்வாதத்தையே நம்பி இருந்தார். 

இந்நிலையில், நேற்று காலையில் திடீரென காலமாகிவிட்டார் மூக்குப்பொடி சாமியார். தகவல் தினகரனின் காதுகளுக்குப் போக, மனிதருக்கு தலைசுற்றிவிட்டதாம். ‘ஏன், எப்படி, என்னாச்சு?’ என்று ஒரே கேள்விகளாய் கேட்டுப் புலம்பியதோடு, செம்ம அப்செட்டுக்கும் ஆளாகிவிட்டாராம் தினகரன். எதற்கும் கலங்காத இதயத்தை அண்ணனுக்கு வழங்கிய மூக்க்குப்பொடி சித்தரின் சாவு அண்ணனை கலங்க வைத்துவிட்டது! என்று தினாவின் ஆதரவாளர்களை விசும்ப வைத்திருக்கிறது. 

இச்சூழலில், ’பெரும் பிரச்னைகளில் இருந்து அண்ணனைக் காப்பாற்றிய சித்தர் மறைந்துவிட்டார். இனி அண்ணனின் திட்டங்கள் என்னாகும்? தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதான வழக்கில் துவங்கி எல்லா நெருக்கடிகளையும் தூசு தட்டுவார்கள். அரசியலில் சாதிக்க துடிக்கும் அண்ணனின் கனவுகள் இனி பலிக்காதா? சித்தரின் மறைவு, அண்ணனுக்கு பெரும் சரிவா?” என்று புலம்ப துவங்கியுள்ளனர் அ.ம.மு.க. நிர்வாகிகள். இனி தினகரன் என்னாவார்? என்று சித்தரின் ஆன்மாவுக்குதான் தெரியுமோ!