இன்று தமிழகத்தில் 6 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மகிழ்ச்சி அளித்தாலும், இன்றைக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இவ்வளவு துயரத்திலும் நம்பிக்கை  கீற்றுகள் தென்படத்தான் செய்கின்றன. மருத்துவ அறிவியலுக்கான சீன அகாடமி வெளியிட்டுள்ள தொடக்கநிலை ஆய்வறிக்கை நம்பிக்கையை விதைக்கிறது. குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு,  ஒருமுறை கொரோனா பாதித்த குரங்கிற்கு மறுபடியும் பாதிக்கவில்லை என்று கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு முடிவுகள் உறுதிசெய்யப்படுவதற்கு இன்னமும் அதிக தூரம் செல்லவேண்டும். கொரோனா பாதித்த குரங்குகளில் கிருமிக்கு எதிரான உடலின் ஊக்கிகள் (anti-bodies) உற்பத்தியாகி கொரோனா கிருமி இரண்டாவது முறையாக தொற்றிக் கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்கின்றன. 

தட்டம்மை, அம்மை மற்றும் போலியோ போன்ற வைரஸ்கள் உடலை இரண்டாவது முறையாக பாதிக்காமல் பாதுகாக்க மனிதர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவில் பதிந்துள்ள தகவலை பயன்படுத்துகிறது.  ஏனென்றால்,  மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் துணைக்குழு (subset ) இதற்கு முன்னர் உடலில் தொற்று ஏற்படுத்திய ஒரு நோய்கிருமியின்தகவல்களை நினைவில் சேமித்துக்கொள்ளும். 
புதிதாக தகவமைத்துக்கொண்ட நோய் எதிர்ப்பு அமைப்பு  ஏற்கனவே நினைவில் பதிந்துள்ள கிருமியை எதிர்த்து இன்னும் வீரியத்துடன் போராடி அழித்துவிடும். 2002-03 ஆண்டுகளில் சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு குறிப்பிட்ட அந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு அமைப்பினால் மீண்டும் பாதிக்கப்படாமல் இருந்தனர்.  இதேதான் மெர்ஸ் கிருமிக்கு எதிராக இரண்டாண்டுகள் எதிப்பாற்றலுடன் இருந்தன. குறிப்பிட்ட அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனா வைரஸுக்கு  எதிராகவும் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். 

இந்த நோய்எதிர்ப்பு அமைப்பு எவ்வளவு ஆண்டுகள் வீரியத்துடன் இருக்கும் என்றுதான் இப்போதைக்கு தெரியாது. இரண்டாவது முறை தாக்கும் வைரஸும் இதே வீரியத்துடன் இருக்காது, அதனால் நோய்எதிர்ப்பு அமைப்பு முழுவதும் உருவாகாமல் போனால் கூட அந்த வைரஸை தாக்கவிடாமல் தடுத்துவிடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த காரணங்களால்தான், கொரோனாவிற்கென மருந்துகள் இல்லாத நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்றி குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தீவிரமாக போராடிக்கொண்டிருக்கும்  நோயாளிகளுக்கு பயன்படுத்தி மருத்துவம் பார்க்கிறார்கள். இதைப்போன்ற தகவல்கள் தான் கொரோனாவை உலகம் வெற்றிபெறமுடியும் என்று நம்பிக்கையளிக்கிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட  கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .