ஆண்டிபட்டி பழைய தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ஒரு வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் அ.ம.மு.க., ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. நேற்று இரவு பிரசாரம் ஓய்ந்த நிலையில் இரவு 8:45 மணி முதல் 9:00 மணிக்கு முன்பாக ஆண்டிபட்டி பறக்கும்படை அதிகாரிகளுக்கு அந்த அறையில் இருந்து பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர். 

அப்போது அதிகாரிகளை கண்டவுடன் அறையில் இருந்தவர்கள், பணத்தை எண்ணுவதை விட்டு விட்டு தப்பியோடினர். அ.ம.மு.க., மாவட்ட துணைத் தலைவர் பழநி, க.விலக்கு சுலோன்காலணியை சேர்ந்த சுமன் ஆகிய இருவரும் அறையை அடைத்தனர். மேலும் கட்சிகாரர்களுக்கு மொபைல் மூலம் தகவல் அளித்துக் கொண்டே இருந்தனர். 

இதனால் பறக்கும் படை அதிகாரிகள், கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி, ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சீனிவாசன், போலீசார், சி.ஆர்.பி.எப்., போலீசார் அந்த அறையையும், கட்டடத்தையும் சுற்றி வளைத்தனர்.

அதன்பின், அ.ம.மு.க., வினர் 70 பேர் ஒன்று கூடி மின்சாரத்தை துண்டித்து விட்டு, அந்த கட்டடத்தின் க்ரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று, பணத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தனர். இதனால் அதிகாரிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, தகராறு ஏற்பட்டது. தகராறு கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீசார் வானத்தை நோக்கி நான்குமுறை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ரங்கசமுத்திரத்தை சேர்ந்த பழனி  சுமன் , பிரகாஷ், மது  ஆகியோர்களை பிடித்து , போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி., உயர் அதிகாரிகள் வந்தனர்.


 
இந்நிலையில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் படி தொடங்கியது.  இன்று அதிகாலை வரை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 1 கோடியை 48 லட்சம் ரூபாய் இருந்தது.
இதையடுத்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வருமதன வரித்துறையினர்  விசாரணை  நடத்தி வருகின்றனர்.