money seized from dinakaran supporter in rk nagar

வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஆர்.கே.நகரில் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பணப்பட்டுவாடா புகார்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன. கைது நடவடிக்கைகளும் பணம் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்துவிட வேண்டும் என பிரதான கட்சிகளும் வேட்பாளர்களும் துடிப்பதன் வெளிப்பாடாகவே ஆர்.கே.நகரில் லட்சம் லட்சமாக பணம் புழங்குகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 8 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் பத்ரா, பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் தினகரன் ஆதரவாளரான செல்வி என்ற பெண்ணிடமிருந்து 30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணமா என அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.