Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கட்சிகள்தான் பணத்தை பதுக்குகின்றது...! பண தட்டுப்பாடுக்கு காரணம் கூறும் ஈஸ்வரன்!

Money is blocked for election purpose - Eswaran
Money is blocked for election purpose - Eswaran
Author
First Published Apr 20, 2018, 11:12 AM IST


தேர்தலுக்காக அதிக அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் பதுக்கியிருப்பதால்தான் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட சூழல் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும் என்றும், தேவைக்கு அதிகமான அளவு பணம் உள்ளது என்றும் கூறியிருந்தார். பணத் தட்டுப்பாடு குறித்து கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தேர்தலுக்காக அதிக அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் பதுக்கியிருப்பதால்தான், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இன்னும் பல
மாநிலங்களில் ஒரே சமயத்தில் திடீரென பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது என்றார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், பணத்தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பல மாநிலங்களுக்கு வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலும்தான் காரணம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் செலவுக்காகப் பணத்தைப் பதுக்கினாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். மிகப்பெரிய அளவிலான தொகை பதுக்கப்பட்டதால்தான், அனைத்து மாநிலங்களிலும் சீராக இருந்துவந்த பணப்புழக்கம், திடீரென முடங்கிப்போயிருக்கிறது.  இது ஏழை, நடுத்தர மக்கள், சிறு குறு தொழில்களைச் செய்து வருபவர்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினார்.

பணத்தட்டுப்பாடு கூறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிவரும் நிலையில், தேவைக்கு அதிகமாக பணப்புழக்கம் இருக்க வேண்டுமே தவிர, பணத்தட்டுப்பாடு ஏற்படக் கூடாது. தேர்தலுக்காக அதிக அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் பதுக்கியிருப்பதால்தான் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.

தேர்தல் சமயத்தில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் தேர்தல் ஆணையம், அதன்பிறகு அரசியல் கட்சிகளைக் கண்டு கொள்வதில்லை. அரசியல் கட்சிகளால் பதுக்கப்படும் அதிக அளவிலான தொகைதான், தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் அதிக பணம் செலவு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய வழிமுறைகளை வரையறுக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios