தமிழக ஆளுநர் மாளிகையில் மரச்சாமான்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் போலி பில்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில், மரச்சாமான்கள் மற்றும் தளவாட பொருட்களை முகமது யூனிஸ் என்பவர் விற்பனை செய்து வந்தார். இவர் அடையாறில் பர்னீச்சர் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அங்கிருந்துதான், ஆளுநர் மாளிகைக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இது கடந்த 15 ஆண்டுகளாக சப்ளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகைக்கு தளவாட பொருட்கள் விற்பனை செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார்கள், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அளிக்கப்பட்டுள்ளன. இது பற்றி விசாரிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரச்சாமான்களை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதும், போலி ரசீது மூலம் பண மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து, ஆளுநரின் துணை செயலாளர் சவுரி ராஜன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். 

இதையடுத்து, முகமது யூனிஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், முகமது யூனிஸ்-க்கு சொந்தமான பர்னிச்சர் கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆளுநர் மாளிகைக்கு மரச்சாமான்கள், தளவாட பொருட்கள் சப்ளை செய்வதற்கான போலி பில்களை போலீசார் கைப்பற்றினர். கடந்த 5 ஆண்டுகளில் போலி பில்கள் மூலம் இதுவரை ரூ.10 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
முகமது யூனிசை போலீசார் கைது செய்துள்ளனர். முகமது யூனிஸ் மீது மோசடி வழக்கு, போலியாக தயாரித்தல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முகமது யூனிஸ், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மரச்சாமான்கள் பெற்றதாக போலி பில்கள் தயாரித்து கொடுத்தது யார்? அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.