இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் வாக்காளர்களாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பார்த்து மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு இருக்கிறது தேர்தல் களம்.

அங்கு போட்டியிடும் பிரதான கட்சிகள் எதற்கும், தாங்கள் செய்ததையே, செய்யப்போவதையோ சொல்லி வாக்கு கேட்கும் நிலை இல்லை.

வாக்குக்காக என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்தே, தேர்தல்  முடிவு தீர்மானிக்கப் படும் என்பதை நன்கு உணர்ந்துள்ளன.

தேர்தல் ஆணையம் கண்கொத்தி பாம்பாகக் கண்காணித்தாலும், அதன் கண்களில் மிளகாய் பொடியை தூவி, செய்ய வேண்டியதை சில கட்சிகள் செய்து கொண்டிருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன.

சிலர், ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் என்று எண்ணி டோக்கன்கள் கொடுத்துவிட்டு போகிறார்களாம்.

சிலர், ஒரு வீட்டுக்கு தேவையான டி.வி, வாஷிங் மெஷின், ஏ.சி., மிக்சி போன்றவற்றை வாங்கி கொள்ள, சில ஷோ ரூம்களுக்கான டோக்கன்களை கொடுத்து சொல்கிறார்களாம்.

வெற்றிக்கு வாய்ப்பு உள்ள சில கட்சிகளும், அணிகளும் வெற்றி கோப்பையை, பந்தயத்தில் வாங்க முடியாது என்பதை உணர்ந்து, நாச்சியப்பன் பாத்திரக் கடையில் வாங்கும் முயற்சியிலேயே களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே போல், தேர்தல் பிரச்சாரமும், சேல்ஸ் மேன்கள் வாயிலாகத்தான் நடைபெறுவதாக கள நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில், அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவது போல, அறிமுகம் இல்லாத பல வெளியூர் காரர்கள், தொகுதி முழுவதும் ஆங்காங்கே தங்கி உள்ளனர்.

வாக்காளர்கள் வெளியில் வரும்போது, அவர்களை மடக்கி, கும்பிடு போட்டு அம்மா, ஐயா, அக்கா, தங்கச்சி, தம்பி என வயதுக்கு ஏற்ப அழைத்து, தங்கள் அணிக்கு, அவர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.

மூன்று வேலை சாப்பாடு, குவார்ட்டர், தினமும் 500 முதல் 1000 ரூபாய் வரை பேட்டா கிடைப்பதால், இதுபோன்ற தேர்தல் சேல்ஸ் மேன்களுக்கும், வருவாய்க்கு பஞ்சம் இல்லை. 

குறுகலான சந்து பொந்துகள் நிறைந்த ஆர்.கே.நகரில், வெளியூர் காரர்களின், சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை புகுந்து புறப்பட்டு ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றன.

மறுபக்கம், பிரச்சாரத்திற்கு வந்தவர்களின் கைகளிலும், வாக்காளர்களின் கைகளிலும் பணம் தாராளமாக புழங்குவதால், சாதாரண டீ கடையில் கூட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களே எடுத்து நீட்டப்படுகின்றன.

இங்குள்ள சாதாரண டீ கடைகள் தொடங்கி மதுபான கடைகள் வரை கடந்த சில நாட்களில் வியாபாரம் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

இதை எல்லாம் பார்த்துவிட்டு, பொது தேர்தல் திருவிழா என்றால், இடைத்தேர்தல் பெருவிழா என்று, தொகுதி மக்கள் அனைவரும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.