காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டிவிட்டரில், ஹேப்பி பர்த்டே ராகுல் காந்தி, ராகுல் காந்தி ஜி, ராகுல் ஜி ஆகிய ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

பிறந்த நாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் என்றும், நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும், ராகுலுக்‍கு, தனது டிவிட்டர் பக்‍கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகள் நினைவு கூறப்பட்டுள்ளன.

அதேபோல, ராகுல் காந்திக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாகங்களை, தொண்டர்கள் நடத்தினர்.

இன்று ராகுல் இல்லத்திற்கு நேரில் சென்ற அவரது சகோதரி பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, செய்தியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்‍கு ராகுல் காந்தி இனிப்புகளை வழங்கினார்.