சித்தராமையா அரசு கர்நாடகத்தை முன்னேற்றவில்லை என்றும், பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து, எடியூரப்பாவுக்கு வாக்களித்தால் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக கர்நாடகத்தை மாற்றுவோம் என அமித்ஷா பேசியதை கன்னடத்தில் மொழிப்பெயர்த்த பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்ததில்லை எனவும் நாட்டை சீர் குலைத்து விடுவார் எனவும் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அப்பகுதியில் தேசியத் தலைவர்களின் அரசியல் சுற்றுப் பயணங்கள் சூடுபிடித்துள்ளது. 

இதில் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் முகாமிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் கர்நாடகத்தின் தேவநாகிரி மாவட்டத்தில் சல்க்கரே என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்தியில் உரையாற்றினார். அவரது பேச்சை பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி மேடையில் இருந்தவாறே கன்னடத்தில் மக்களுக்கு மொழிப்பெயர்த்தார். 

அப்போது, அமித்ஷா, மோடி அரசு குறித்தும் காங்கிரஸ் அரசு குறித்தும் இந்தியில் பேசினார். ஏழைகளுக்கும் ,தலித்துகளுக்கும் சித்தராமையா அரசு ஒன்றும் செய்ததில்லை எனவும் பேசினார். 

ஆனால் கன்னடத்தில் மொழி பெயர்த்த பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்ததில்லை எனவும் மோடி நாட்டை சீர்குலைத்து விடுவார் எனவும் கன்னடத்தில் மொழி பெயர்த்து பேசினார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.