காங்கிரஸ் ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு இது ராஜ்ஜியம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி பண்பாடு கலாச்சாரம் உள்ளது. பிரதமர் பதவி என்பது ஒரு ராஜாங்கம் அல்ல, மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. 

இந்த ஜென்மத்தில் மோடியால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது, என்றும் தமிழ்நாட்டை அடக்க நினைத்தால் அதில் தோல்விதான் மிஞ்சும் என ராகுல்காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் ராகுல்காந்தி இவ்வாறு உரையாற்றினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் அந்த அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் மத்திய பாஜக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் பாஜகவை வலுவாக எதிர்க்கும் அதே நேரத்தில், மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மஹாராட்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாஜகவை எதிர்ப்பதில் முன்னணி வரிசையில் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கேரளத்தை காட்டிலும் தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு கருப்புக் கொடி காட்டியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் நீட் விவகாரத்தில் தமிழக அரசு பாஜகவை கடுமையாக விமர்சிப்பதுடன் மோடி அரசு தமிழர்களுக்கு எதிரானது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்தான் காந்தி நினைவு தினத்தன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோட்சேவின் வாரிசுகளுக்கு நாட்டில் இடமில்லை என டுவிட்டரில் கருத்து பதிவிட்டு நேரடியாகவே பாஜகவை விமர்சித்துள்ளார். இது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இது ஒருபுறமிருக்க ஆளுநர் மூலம் திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது என்றும், மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசின் மீது பாஜகவுக்கு உள்ள எதிர் மனநிலையே காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாகி வருகிறது. அதேபோல் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் மத்திய பாஜகவை எதிர்த்து வருகின்றன. மம்தா பானர்ஜி வெளிப்படையாக மோடியையும் பாஜக அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு டெல்லி திரும்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் அங்கும் வலுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அவை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது அம்மாநில அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மக்கள் மத்தியில் பாஜக எதிர்ப்பு மனநிலையை அதிகரிக்க செய்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிரான அலையும் வீசுகிறது. இதேபோல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடுகளான உறவும் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. நேபாளம், பூட்டான், இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான் நேற்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பி ராகுல் காந்தி இந்த விவகாரங்களை மேற்காட்டி உரையாற்றியுள்ளார். அப்போது அவர் மோடி அரசின் நடவடிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:- கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் இரண்டு இந்தியா உள்ளது, ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழைகளுக்கான இந்தியா, இந்த இரண்டு இந்தியாக்களுக்கு இடையேயான இடைவெளி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இரண்டு இந்தியாவையும் சமபடுத்துவதற்கான திட்டம் பிரதமர் மோடியிடம் இல்லை. 84 சதவீதம் மக்கள் வருமானம் குறைந்து வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக் இன் இந்தியா திட்டம், மேட் இன் இந்தியா திட்டம் ஒருபோதும் இந்தியாவில் சாத்தியம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு இது ராஜ்ஜியம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி பண்பாடு கலாச்சாரம் உள்ளது. பிரதமர் பதவி என்பது ஒரு ராஜாங்கம் அல்ல, மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் மையத்தில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மோடி ஆளநினைக்கிறார். விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லியிலும் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் அது கண்டுகொள்ளப்படவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளது. அதை மத்திய அரசு மதிப்பதே இல்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அது குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் இல்லை.

தமிழ்நாட்டை அடக்கியாள நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும். பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது என ராகுல் ஆவேசமாக கூறினார். அவரின் இந்த பேச்சை அவையில் இருந்த பலரும் மேசையே தட்டி வரவேற்று உற்சாகப்படுத்தினர். அதேநேரத்தில் பாஜக எம்பிக்கள் அவரின் பேச்சுக்கு எதிர்விணையின்றி கூர்ந்து கவனித்தனர். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு ராகுல் முக்கித்துவம் கொடுத்து பேசியிருப்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.