திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உறுதியோடு நீங்கள் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து உள்ளீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. மோடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பணியை நீங்கள் செய்தீர்கள். 

அதேபோன்று மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வோடு வருகிற 19–ந்தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து டாக்டர் சரவணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என  கேட்டுக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை காப்பாற்றி வருவது மோடி தான். 19–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.

கடந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே  வருகிற 23–ந் தேதியுடன் மோடி ஆட்சி காலியாகி விடும். எனவே அவர்களை மோடியும் காப்பாற்ற முடியாது.

அடுத்ததாக அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்குவதற்கு செல்லலாம். ஆனால் அவர்கள் கஷ்ட காலம் என்வென்றால் உச்சநீதிமன்றத்திற்கு தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டு விட்டது. எனவே இனி அவர்களால் எங்கும் செல்ல முடியாது.

எதற்காக இந்த கணக்கை எடுத்து உங்களிடம் கூறுகிறேன் என்றால் வருகிற 19–ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிறது. எனவே ஆட்சி மாற வேண்டும் என்றால் நம்முடைய மெஜாரிட்டியை 119 எனக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அதற்கு திருப்பரங்குன்றம் தொகுதி வெற்றி மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் பேசினார்..