மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது  தலைமையிலான முதல் நிதி ஆயோக் கூட்டம் ஜூன் 15 ல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தின் அழைப்பை புறக்கணிக்கப் போவதாக மம்தா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று மம்தா எழுதியுள்ள கடிதத்தில், “நிதி ஆயோக்கிற்கு நிதி சார்ந்த அதிகாரம் எதுவும் கிடையாது. 

மாநில அரசின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதிகாரமும் இல்லை. எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்பதால் என்ன பயனிருக்கிறது  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொருளாதார விவகாரங்களிலும், வளங்கள் ஒதுக்கீட்டிலும் நாட்டின் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை திட்டக் குழு பிரதிநிதித்துவப் படுத்தியது. ஆனால், மாநில முதலமைச்சர்களிடம் எந்த விவாதங்களும் நடத்தாமல் அவர்களின் கருத்துக்களையும் கேட்காமல் ஒரு தலைபட்சமாக நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஜனவரி 1, 2015 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் இந்த நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை மத்திய அரசு கேட்கவில்லை ” எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமரான மோடியின் பதவியேற்பு விழாவின் அழைப்பையும் மம்தா பானர்ஜி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.