காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் அசாம் மாநிலத்துக்காக 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களிடம் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கவுகாத்தியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திரிசூலத்தை கையில் வைத்து எதிர்்க்கட்சியினரை மிரட்டுகிறார்கள். 

ஆம், சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகிய 3 அமைப்புகளையும் திரிசூலமாகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இந்த 3 அமைப்புகளும் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகள் இந்த அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டுதான் எதிர்க்கட்சிகளை பணிய வைக்கிறார்கள். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த மசோதா ஆகிய அரசியல்ஆயுதங்களைப் பயன்படுத்தி நாட்டை துண்டாடவும், மதங்களுக்கு இடையே பிளவுபடுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்” எனத் தெரிவித்தார்