அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை மே 20-ம் தேதியிட்ட இதழில்  அட்டைப் படத்தில் பிரதமர் மோடி காவித் துண்டுடன் இருக்கும் மிகவும் ஒரு அழுத்தமான ஓவியம் இடம் பெற்றுள்ளது. அட்டைப் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பும் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளும் மோடியின் ஆட்சியை இந்தியா சகித்துக் கொள்ளுமா? என்று துணை தலைப்பையும் வைத்துள்ளது.

“இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கட்டமைப்புகளான, மாநில சுயாட்சி, அதன் நிறுவன தலைவர்கள், சிறுபான்மையினரின் நிறுவனங்கள் மற்றும் இடங்கள், மீடியாக்கள், பல்கலைக்கழகங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன” என்றும், “நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எவரும் தப்பவில்லை” என்றும் ‘டைம்’ பத்திரிகை கூறியுள்ளது.

மேலும், “2014 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின் போது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்ததார்; ஆனால் அவரது மாயாஜாலம் பலிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ள டைம் இதழ் மோடி, மதம் சார்ந்த தேசியவாதத்தை இந்தியாவில் உருவாக்கி விட்டடதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

“2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும், மக்களால் பார்க்கப்படுகிறார்” என்று கட்டுரையை முடித்துள்ளது.

2012-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக  மோடி பதவி வகித்தபோது, இதே பத்ரிக்கை அவரது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு, மிகப்பெரும் சக்தியாக அவர் உருவாகிக் கொண்டு இருப்பதாக கூறியிருந்தது. 

மோடி பிரதமரான பின்பும், 2015-ஆம் ஆண்டு அவரிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றையும் நடத்தி, இதனை டைம் இதழில் வெளியிட்டிருந்தது.தற்போது அதே ‘டைம்’ பத்திரிகை, மோடியின் ஆட்சியில் இந்தியா படுமோசமான நிலைக்கு போய்விட்டதாக சாடியுள்ளது. 

மேலும் தற்போதைய  இதழில், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வேளையில் மோடி வெறும் தோல்வி அடைந்த அரசியல்வாதியாக, மற்றொரு வாய்ப்பு கேட்டு தேர்தலை சந்திக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ‘டைம்’ பத்திரிகையின் கட்டுரை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.