இந்திய-சீன முறை சாரா உச்சி மாநாடு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பிற்கு பிறகு கோவளத்தில் தங்கி இருந்தார். நேற்று பிற்பகலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானம் மூலமாக சென்னை வந்தார்.

அவருக்கு தமிழக அரசு சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர், மாலையில் மாமல்லபுரம் சென்றார். அங்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமர் மோடி சீன அதிபரை உற்சாகமாக வரவேற்றார். அங்கு சிற்பங்களை பார்வையிட்ட அவர்கள் கலைநிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவு அருந்தினர்.

அதன் பிறகு சீன அதிபர் சென்னை திரும்பினார். இன்று காலை கோவளம் சென்ற அவர் இருநாட்டு நல்லுறவு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றும் இன்றும் மொத்தமாக 6 மணி நேரம் இருவரும் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிற்பகலில் மீண்டும் சென்னை திருப்பிய சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார். அவரை தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் வழியனுப்பினர்.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தமிழக சகோதர சகோதரிகளுக்கு நன்றி என தமிழில் பதிவிட்டுள்ளார். தமிழர்களின் அன்பும் உபசரிப்பும் தனித்துவமானது என்றும் ஆற்றல் மிக்க தமிழகத்தின் மக்களோடு இருப்பது மகிழ்ச்சி அடைய வைப்பதாகவும்  பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மாமல்லபுரம் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாசார அமைப்புகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.