அரியானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் அங்குள்ள ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அங்கு நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் அவர் ஆவேசமாகவும், உணர்ச்சிப்பெருக்குடனும் பேசினார். அப்போது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவு செய்கிற தருணத்தில் அரியானா மாநிலத்துக்கு நான் வந்திருக்கிறேன். இந்த 100 நாட்களில், சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் மோசமான நிலையில் உள்ளனர். சிலர் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் உணர்ச்சியற்று போய் விட்டார்கள்.

இந்த 100 நாட்கள் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்களின் நாட்கள். இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன.

இந்த நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் பின்னால் 130 கோடி இந்திய மக்களும் அளித்த ஊக்கம் இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவால்தான், நாடு விவசாயத்துறை தொடங்கி தேசிய பாதுகாப்பு வரை முக்கிய முடிவுகள் எடுக்க முடிந்தது. 

பயங்கரவாத தடுப்பு, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிற நோக்கத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவுகிற விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. வங்கித்துறையை பலப்படுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. 

நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்திப்போம். அவற்றை சந்திப்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். அது ஜம்மு காஷ்மீர், லடாக் விவகாரமாக இருக்கட்டும், தீவிரமான தண்ணீர் பிரச்சினையாக இருக்கட்டும். புதிய தீர்வுகளை 130 கோடி இந்திய மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பாஜக அரசுகளின் முக்கிய முன்னுரிமை, ஏழை எளியோரின் நலன்களை கவனிப்பதுதான். நாங்கள் துண்டு துண்டாக பிரச்சினைகளை அணுகுவதில்லை. ஒரு பெரிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அனைத்து துறை நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் என மோடி அதிரடியாக பேசினார்..

நாட்டை இஸ்ரோ திட்டம் தட்டி எழுப்பி உள்ளது. சந்திரயான்-2 விண்கல திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது. நாடு இப்போது வெற்றி, தோல்விக்கு அப்பால் பார்க்கத் தொடங்கி உள்ளது. என்றும் பிரதமர் மோடி பேசினார்.