பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி திட்டத்தை 20 லட்சம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டதை நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்துவருகிறார்கள்.
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு உரையாற்றினார். அப்போது ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்தார் மோடி. இதுகுறித்து மோடி  தனது உரையில், “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத நிதி  கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு வழங்கப்படும். ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.


பிரதமர் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின்படியான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தன் உரையின்போது குறிப்பிட்டார். இந்நிலையில் உரையை பிரதமர் முடித்த பிறகு இதுபற்றி ட்விட்டர் பதிவு ஒன்றை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அதில், “சிறப்பு பொருளாதார தொகுப்பான ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தில் உள் நாட்டு மொத்த உற்பத்தியில் 10 சதவீத நிதி (20 லட்சம்) ஒதுக்கப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது உதவும்” என்று பிரதமர் மோடி பேசியதை  நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவில், 20 லட்சம் கோடி ரூபாயை நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அனைவரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்ட நிர்மலா சீத்தாராமன், “20 லட்சம் கோடி என்று திருத்தி வாசிக்கவும்” என்று திருத்திய ட்விட்டர் பதிவையும் வெளியிட்டார். நிர்மலா சீத்தாரமன் தவறாக வெளியிட்ட தொகையை சமூக ஊடங்களில் பலரும் பகிர்ந்து கேலி, கிண்டல் செய்ய தொடங்கிவிட்டார்கள்.