பிரதமராக மோடி பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பிதழ் வந்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

வரும் வியாழன் அன்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார். இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கியத் தலைவர்களுக்கும் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றதுடன் 23 மக்களவை எம்பிக்களை கொண்டுள்ள திமுகவின் தலைவராகவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளது.

இதனையடுத்து மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதாக வேண்டாமா என்று ஸ்டாலின் தனது நெருக்கமான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆ ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் தலைவரான நீங்கள் கலந்து கொள்ளாமல் வேறு யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் ஸ்டாலின் மருமகன் சபரீசனோ பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதால் பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

ஆனால் மோடியின் பதவியேற்பு க்காக டில்லி செல்லும் பட்சத்தில் தமிழகத்தில் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஸ்டாலினிடம் ஆழமான கருத்தை சில நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தேர்வாகியுள்ள டிஆர் பாலுவை அனுப்பி வைப்பது என்று ஸ்டாலின் முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் பதவி ஏற்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் கடைசி நேரத்தில் கூட ஸ்டாலின் டெல்லி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவரது தரப்பில் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள்.