மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த திருவாரூரில் இன்று தொடங்கினார்.

இதையடுத்து இன்று திருவாரூரில் பல வீதிகளில் ஸ்டாலின்  நடந்த சென்று வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். திருவாரூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற வேட்பாளர்  செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டதிதில் பேசிய அவர், ''மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கெடு ஜூன் 3-ம் தேதி முடிகிறது. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளில்தான் அந்த ஆட்சி முடிவடைகிறது.  இது எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது என தெரிவித்தார்.

இதே போல் 18 தொகுதிகளின் தேர்வு முடிவும் அதே சமயத்தில்தான் வரப்போகிறது. அப்படி வரும் போது மோடியின் ஆட்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் என கூறினார்.

ஊழலை ஒழிப்பேன் என்று சொன்ன மோடி, ஊழலில் திளைத்து ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்' என்றார் ஸ்டாலின்.