ஜனநாயக அமைப்புகளை ஒவ்வொன்றாக ஆர்.எஸ்.எஸ்., அதிகாரத்தின் மூலம் திட்டமிட்டு கைப்பற்றி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே பிரதமர் மோடி சிதைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

 கர்நாடக அரசு சார்பில், பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச 3 நாள் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கிவைத்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அவர் பேசியதாவது-

பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தங்களின் குரல் மூலம் இந்தியா தங்களிடம் சரணடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் மூலம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நமக்கு அளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள். 

ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் காலடி வைக்கும்போது, லட்சக்கணக்காண மக்கள் வாய்மூடி அமைதியாக இருந்ததால், மிகுந்த அதிகாரம்படைத்த ஆங்கிலேயர்கள் தங்களுக்கு எது சரியானது, தேவையானது என்பதை உணர்ந்து அதைச் செய்தார்கள். ஆங்கிலேயர்களை தொடக்கத்திலேயே எதிர்க்காமல் அமைதியாக இருந்ததால்தான் நாம் நமது சுதந்திரத்தை பறிகொடுத்தோம். 

அதேபோன்ற சூழல்தான் இப்போது நாட்டில் நடந்து வருகிறது. தங்கள் கண்முன் நடக்கும் அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் பத்திரிகையாளர்கள் எழுதுவதில்லை, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கக் கூறி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படி ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்க நடக்கிறது. 

இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் மிக எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில இந்தியர்கள் மூலம்தான் அது ஒப்படைக்கப்பட்டது. நாம் நமது எதிர்ப்புக் குரலை இழந்ததால்தான், நாம் அவர்களிடம் பணிந்தோம். இந்த செயலைத்தான் மோடியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் செய்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள்.
 
அவர்களைப் பொருத்தவரை, அவர்களின் குரலுக்கு இந்தியா மண்டியிட்டு கிடக்க வேண்டும். ஜனாநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பையும் ஆர்.எஸ். எஸ்., அதிகாரம், பிரதமர் மோடி ஆகியோர் திட்டமிட்டு கைப்பற்றி வருகிறார்கள். மறந்துவிடாதீர்கள், எதிர்காலத்தில் ஒவ்வொரு இந்தியரின் குரலும் ஒடுக்கப்படும், ஒவ்வொரு இந்தியரின் எதிர்காலமும் பறிக்கப்படும். ஆனால், அதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்க கூடாது. 

ரூபாய் நோட்டு தடையின் போது பிரதமர் மோடி, யாருடைய ஆலோசனையையும் கேட்கவில்லை, விவசாயிகளின் குரலும் காதில் விழவில்லை. ஆயிரக்கணக்கான வர்த்தகங்கள் மூடப்பட்டன. 

தலித் மாணவர் ரோகித் வெமுலா சாவை மத்தியஅரசும், இந்து அமைப்புகளும் தற்கொலை என்றன. ஆனால், நான் அது கொலை என்றேன். ரோகித் உள்நாட்டு சக்திகளால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டார்.  தலித் என்ற காரணத்தினாலேயே ரோகித் கொல்லப்பட்டார். ரோகித் கொல்லப்படுவதற்கு ஆயுதமாக இருந்ததே, மத்திய அரசு அவர் பயிலும் பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதம் தான். ஆனால், அந்த கடிதம் எதிர்காலத்தில் அழிக்கப்பட்டது. 

இதேபோல, முகமது அக்லக் என்ற கசாப்பு கடைக்காரர், பசுவின் கறி வீட்டில் வைத்து இருந்ததாகக் கூறி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்காண விவசாயிகள் தற்கொலை சொய்துகொண்டார்கள். ஆனால், மத்தியஅரசோ, பயிர்கடன் தள்ளுபடியாக ஒரு பைசாகூட செய்யவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்தது. 

இவ்வாறு அவர் பேசினார்.