வேலுார் மக்களவை தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ளது. நாளை பிரச்சாரம் முடிய உள்ள நிலையில், அதிமுக, திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனல் கிளப்பி வருகின்றனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பிஎஸ் உள்ளிட்ட தலைவர்களும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் வேலூரில் முகாமிட்டு ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் துரை முருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது, அதிமுகவினர், மோடி எங்கள் டாடி. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடி தலைமையில் அமையப்போகும் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என மோடி புராணத்தை வாசித்து வந்தனர் அதிமுகவினர். திமுகவினரோ ராகுல் காந்தி பிரதமரானால் மதவாதம் இருக்காது. ஆகையால் ராகுல் காந்தி பிரதமராக திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என முன்னிலைப்படுத்தினர். ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்திலும், திமுக 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

இந்திய அளவில் நிலைமை நேரெதிராக அமைந்து விட்டது. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் இந்திய அளவில் அதிக இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றாலும் இந்திய அளவில் படுதோல்வியை தழுவியது. ராகுல் காந்தி பிரதமராகும் பட்சத்தில் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததால் தான் திமுக அதிக அளவில் சீட்டுக்களை பிடித்தது. ஆனால் அவர் பிரதமராகாததால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்தது. 

ஆகையால், இந்தத் தேர்தலில், மறந்தும் கூட, இரு கட்சியினரும், மோடி பற்றியோ, ராகுல்காந்தி குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த தேர்தலில் அவர்களது பெயர்களை சொல்லி, எந்த லாபமும் இல்லை என நினைத்து விட்டதாக இரு கட்சி பிரமுகர்களும் காதைக் கடிக்கிறார்கள்.