Modi Rahul Akhilesh Yadav Mayawati campaign simultaneously
உத்தரப்பிரதேசத்தில் 7-வது இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. கோவில் நகரமான வாரணாசியில் பிரதமர் மோடி, ராகுல் மற்றும் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகயோர் முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
ஏற்கனவே 5 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில, 6-வது கட்ட தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது.
வாரணாசி தேர்தல் களம்
இந்த நிலையில், 7-வது இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட வாரணாசியில் இன்று முக்கிய தலைவர்கள் முற்றுகையிட்டு, போட்டா போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று மாலை 3 மணிக்கு வாரணாசி வருகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் அவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று அவர் சாமி கும்பிடுகிறார்.
மோடி, ராகுல் பிரசாரம்
பின்னர் அருகில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அதன்பின் காசி வித்யாபீட பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசுகிறார். இந்த சட்டசபை தேர்தலில் வாரணாசியில் அவர் பங்கேற்கும் முதல் பிரசார கூட்டம் இதுவாகும்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இன்று வாரணாசியில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவருடன் முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவும் பங்கேற்கிறார் இதன் காரணமாக, எப்போதுமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வாரணாசியில் இன்று நிலைமையை சமாளிக்க போலீசார் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும்.
மாயாவதி
ராகுல் காந்தியின் வாரணாசி பிரசாரம் ஏற்கனவே இரு முறை தள்ளி வைக்கப்பட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதற்காக, மாவட்ட நிர்வாகம், கருப்பு பூனை பாதுகாப்பு படையினருடன் ஆலோசித்து 10 கிலோ மீட்டர் தூர வழித்தடம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரும் வாரணாசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
அனுப்பிரியா பட்டீல்
மாயாவதி ரோஹனியா தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் அனுப்பிரியா பட்டேல், கடந்த அப்னா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும் இது.
அவர் மத்திய அமைச்சர் ஆனதால், 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அப்னா தளத்திடம் இருந்து இந்தத் தொகுதியை தட்டிப்பறித்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மோடி
தற்போது இரண்டாக பிளவு பட்டுள்ள அந்தக் கட்சியில், அனுப்பிரியா பட்டேல் தலைமையிலான பிரிவு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அவருடைய தாயார் கிருஷ்ணா தலைமையிலான அணி தனியாக போட்டியிடுகிறது.
7-வது இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் வருகிற திங்கட் கிழமை மாலையுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் ‘வாரணாசி’
பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி மக்களவை தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. அதில் 3 தொகுதிகளில் கடந்த 2012 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜனதா ெவற்றி பெற்று இருந்தது.
தற்போது காங்கிரஸ்-அகிலேஷின் சமாஜ்வாதி கூட்டணியால், வாரணாசி மக்களவை தொகுதியில் பா.ஜனதா கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
தற்போது பா.ஜனதா வசம் இருக்கும் 3 தொகுதிகளிலுமே, காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகள் கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், பா.ஜனதாவை விட அதிக ஓட்டுகள் வருகிறது.
அத்துடன் இந்த மூன்று தொகுதிகளில் வாரணாசி மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருந்தது. வாரணாசி வடக்கு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி 3-வது இடத்தில் இருந்தது.
அந்த தொகுதியில் பா.ஜனதா மற்றும் பகுஜன்சமாஜ் முதல் இரு இடத்தையும், காங்கிரஸ் 4-வது இடத்தையும் பெற்று இருந்தது. வாரணாசி நகரப்பகுதியில் அடங்கி இருக்கும் இந்த மூன்று தொகுதிகளிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
ரொஹானியா மற்றும் சேவாபுரி ஆகிய இரு கிராமப்புற தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மோடியின் தொகுதி என்பதால் அங்கு வெற்றி பெறுவதை கவுரவ பிரச்சினையாக கருதி பா.ஜனதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
