காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று 27 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி நடத்திய போராட்டத்தின் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அதிரடியாக நேற்று அறிவித்தார். காங்கிரஸ், திமுக, திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நிலையில், நேற்றைய தினமே சட்டப் பிரிவை நீக்கும் முடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, மாநிலங்களவையிலும் பாஜக அரசு அதை நிறைவேற்றிக் காட்டியது.
மக்களவையில் இந்த விவகாரத்தின் மீது இன்று விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 71 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீரை பிரிக்கப்பட்டிருப்பதை பாஜகவினர் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கொண்டாடிவருகின்றன. தங்களுடைய நெடுநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக இந்த அமைப்பினரும் பாஜகவினரும் தெரிவித்துவருகிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அந்தப் பகிர்வும், அதில் இடம் பெற்றுள்ள புகைப்படமும்  தற்போது சமூக ஊடங்களில் வேகமாகப் பரவிவருகிறது. 'வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது' என்ற தலைப்பில் ராம் மாதவ் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் 40 வயதுகளில் மோடி ஒரு போராட்டத்தில் அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. அதில்,  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்கக் கோரி மோடி அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்.

 
மோடியின் பின் பக்கம் உள்ள பேனரில் '370 -ஐ நீக்கு, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டு’ என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டுவாக்கில் காஷ்மீரின் 370 சட்டப் பிரிவுக்கு எதிராக மோடி போராட்டம் நடத்தும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அன்று மோடி நடத்திய போராட்டத்துக்கு இன்று அவருடைய  தலைமையிலான ஆட்சியில் வெற்றிக் கிடைத்துவிட்டதாக பாஜகவினர் அதை ஷேர் செய்து கொண்டாடிவருகிறார்கள்.