தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின் பிரசார பட்டாசுக்கு பக்காவாய் திரிகிள்ளியிருக்கிறார் மோடி. சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தமிழகத்தில் பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தலைவர்கள் புடை சூழ பெரும் பொதுக்கூட்டம் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

மெகா பிரசார மேடைக்கு மோடி வந்ததும், கூட்டணி கட்சி தலைவர்களின் பதற்ற ரியாக்‌ஷன்கள் வெரைட்டியாக இருந்தன. கடந்த இரண்டு மாதங்களில் திருப்பூர், கன்னியாகுமரி என்று தொடந்து இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரையும் அரசு விழா மேடையில் சந்தித்து வருவதினால், பிரதமரின் கவனம் முழுக்க முழுக்க இன்று புதிய வரவான டாக்டர் ராமதாஸ் மீதுதான் இருந்தது. 

ராமதாஸின் இரு கைகளையும் பாசத்தோடு அழுத்திப் பிடித்து, ‘வெல்கம்! வெல்கம்!’ என்று கூட்டணிக்கு வரவேற்றார். தங்களை விட ராமதாஸுக்கு பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில் தமிழக முதல்வர்கள் இருவருக்கும் சற்றே முகம் சுருங்கிவிட்டது. 

டாக்டர். கிருஷ்ணசாமி மிகவும் பிரயத்னப்பட்டு சென்று பிரதமரிடம் கைகுலுக்கி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் ஏனோ அவரை பெரிதாய் மோடி அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர் சற்றே கிறுகிறுத்துவிட்டார். 

இந்த மேடையில் ஜான் பாண்டியன் அமர்த்தப்பட்டதை அரசியல் பார்வையாளர்கள் ஷாக்காக பார்க்கின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் ஒரே சமுதாய மக்களை மையமாக வைத்து அரசியல் செய்பவர்கள். ஆனாலும் ஜான் பாண்டியனின் பழைய கதைகளை இந்த நேரத்தில் சொல்லி நினைவூட்டும் பார்வையாளர்கள், ஆனானப்பட்ட பிரதமருக்கு ஜான் பாண்டியன் சால்வை போர்த்தி, கைகுலுக்கி தன்னை ‘ஐ ஆம் ஜான்பாண்டியன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சூழலை அதிர்ச்சி கலையாமல் குறிப்பிடுகின்றனர். 

இது போக, பிரதமருக்கு சால்வை போடுவதற்கு விரைந்து அனுமதி கேட்டு இல.கணேசனிடம் ஏ.சி.எஸ். கிட்டத்தட்ட கெஞ்சியதையும், உ.தனியரசுவின் கலர்ஃபுல் துண்டினை பிரதமர் ஆச்சரியமாக நோட்டமிட்டதும் வண்டலூர் மேடையின் வெரைட்டியான ரியாக்‌ஷன்கள்தான். 

ஹும்! இந்த மேடையில் கூலிங்கிளாஸ் சகிதமாக உட்கார்ந்திருக்க வேண்டிய கேப்டன் ஆப்சென்ட் ஆனதும் ஒரு அரசியல் கூத்துதான்.