Modi meets with fishermen farmers

கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

ஒக்கி புயல் கோரத்தாண்டவத்தால் உருக்குலைந்து போன கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் பிரதிநிதிகளை சந்தித்து பிரதமர் மோடி இன்று ஆறுதல் கூறினார்.

முன்னதாக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை எம்பி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்ட பலர் பிரதமருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்புக்குப் பிறகு, விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒக்கி புயல் பாதிப்பு குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.4.047 கோடி நிவாரண நிதி தேவை என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

கன்னியாகுமரி, அரசு விருந்தினர் மாளிகை வந்துள்ள பிரதமர் மோடி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.