கேரள மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. ஆனாலும் கேரளத்தில் காலடி எடுத்து வைத்து அதற்கான காரணத்தையும் சொல்லி அசத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, இன்று கேரள மாநிலத்துக்குச் சென்றார். குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. திருச்சூரில் அவர் பொதுக் கூட்டம் ஒன்றில் தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, “சில கட்சிகள் மக்களவை தேர்தலின் போது மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன.

 

கேரளாவில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது கேரளா. மக்களவை தேர்தலில், கேரளாவில் பாஜக ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருந்தும் நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்பது குறித்து பலர் குழம்பியுள்ளனர். எனக்கு என் நாட்டு மக்களைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. வாரணாசி மக்களை நான் எப்படிப் பார்க்கிறோனோ அப்படித்தான் நான் கேரள மக்களையும் பார்ப்பேன். 
 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்தான் நாட்டில் இருக்கும் 130 கோடி பேரையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களை வெற்றி பெற வைத்தவர்களும், தோற்கடித்தவர்களும் இந்த நாட்டு மக்கள்தான். தேர்தலுக்காக மட்டும் பாஜக வேலை செய்யவில்லை. நம் நாட்டுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பணி செய்து கொண்டிருக்கிறோம்’’ என அவர் தெரிவித்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒரு சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதே நேரத்தில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரு சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கேரளாவின் வயநாடு தொகுதியில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போல் பாஜக தமிழகத்திலும் படுதோல்வியை தழுவியது. கேரளத்தை போன்றே காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அடுத்து அவர் தமிழகத்துக்கு வருகை தர இருப்பதாகக் கூறப்படுகிறது.