நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த யார் பிரதமராக வர வேண்டும் என இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து 38600 பேரிடம் 193 மக்களவைத்  தொகுதிகளில் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன. இவை கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 47 சதவீதம் பேர்  கருத்து தெரிவித்துள்ளனர்.. 30 சதவீதம் பேரின் தேர்வு ராகுல்காந்தியாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறதா என்ற கேள்விக்கு 46 சதவீதம் பேர் ஆம் என்றும் ,44 சதவீதம் பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர்.

வேலையின்மை பிரச்சினையால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதாக 46 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் இதற்கு ஆதரவாக 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எனினும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு 60 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது பாகிஸ்தானுடனான பதற்றமான சூழலை கையாளும் விதத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக 58 சதவீதம் பேரும் திருப்திகரமாக இல்லை என்று 31 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஊழலை பொருத்தவரை பாஜக அரசு திறமையாக கையாண்டதாக 51 சதவீதம் பேரும் இதற்கு எதிராக 40 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

கருப்பு பணம், பண மதிப்பிழப்பு  வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க மோடி அரசு நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் இல்லை என்றும் 30 சதவீதம் பேர் ஆம் என்றும் தெரிவித்துள்ளனர். 

பணமதிப்பிழப்பு தேசத்தின் பொருளாதாரத்தை பாதித்ததா என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் ஆம் என்றும் 41 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவைப் பொறுத்த வரை அந்தக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்கிறதோ இல்லையோ, அடுத்த பிரதமராக நரேந்திர மோடிதான் வரவேண்டும் என இந்திய மக்கள் விரும்புவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.