தமிழகம் வரும் காங்கிரஸ்., எம்.பி., ராகுல்காந்தி மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தெருகிறார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு வரவேண்டாம் எனக்கூறி #Jallikattu, #GoBackRahul என்னும் ஹேஸ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது.

தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை பார்வையிட காங்கிரஸ் எம்.பி.,யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தமிழகம் வர இருக்கிறார்.  சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ராகுலின் வருகை காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், ராகுல் காந்தியின் வருகைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது காங்கிரஸ், கட்சிதான் என நெட்டிசன்கள் அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சிலஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘’பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 2014ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தோம். அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி’எனக் கூறியிருந்தார். 

இப்படி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துவிட்டு, அதை காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி என்றும் வர்ணித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தற்போது ஜல்லிக்கட்டை பார்க்க வருவது அரசியல் ஆதாயத்திற்கானது என சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு வராதீர்கள் எனவும், காங்கிரஸ் விதித்த தடையை பல போராட்டங்களுக்கு பிறகு வென்றெடுத்த பிறகு, தங்களது தவறை மறைக்க ராகுல் பார்வையிட வருவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் ராகுல் மற்றும் காங்கிரஸுக்கு ஆதரவாக, முன்பு சில அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த காங்கிரஸ் தற்போது பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் ஜல்லிக்கட்டை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்கள் நிலைபாட்டை மாற்றியுள்ளது வரவேற்க வேண்டியது தானே' எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர்