நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோடியிடம் எதேச்சதிகாரப் போக்கு இருப்பதாகவும், தமிழர்களின் நேர்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரச்சனையில் திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதே போன்று நாடாளுமன்றத்தில் கடந்த 8 நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோர் என தமிழக எம்.பி.க்கள் சூளுரைத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்வதாக குறிப்பிட்டார். உதாரணமாக மத்திய பட்ஜெட்டை எந்தவித விவாதமுமின்றி பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது மோடியின் எதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.

ஜனநாயக மரபுப்படி பட்ஜெட் தொடர்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தை அவர்களுக்கு செலவிடுவதற்கு பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டாமா என கேள்வி எழுப்பிய தம்பிதுரை, தமிழகளின் உணர்வுகளையும் பாஜக மதிப்பதில்லை என குற்றம்சாட்டினார்.

இனிமேலாவது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தம்பிதுரை கேட்டுக்கொண்டார்.