சசிகலாவையும், அவரது குடும்ப உறவுகளையும் அரசியலை விட்டே ஓரம் கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி, கங்கணம் கட்டி கொண்டு செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மோடி அவ்வாறு நடந்து கொள்வதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர் பாஜகவினர்.

மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, ஜெயலலிதாவின் உடல் நலம் கருதி, அனுபவம் உள்ள நர்ஸ் ஒருவரை போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தார்.

அவரும், கண்ணும், கருத்துமாக ஜெயலலிதாவை கவனித்து கொண்டார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அந்த நர்ஸை மிரட்டி அங்கிருந்து வெளியேற்றி விட்டார் சசிகலா.

திரும்பி வந்த நர்ஸ், மோடியை சந்தித்து, ஜெயலலிதாவிற்கு தவறான மருந்துகள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், அவர் உயிருக்கே ஆபத்து வந்து விடும். அதை தடுக்க முயன்ற என்னை, சசிகலா மிரட்டி வெளியேற்றி விட்டார் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு, மோடியும் ஜெயலலிதாவை சந்தித்து, கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார். எல்லாம் எனக்கு தெரியாமல் இல்லை. யாரும் இல்லாத நான், சிலரை நம்பித்தானே ஆக வேண்டி இருக்கிறது. எல்லாம் ஆண்டவன் செயல் என்று மோடியிடம் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

அதை கேள்விப்பட்டு, மோடியின் மீது கடும் கோபமடைந்துள்ளார் சசிகலா. அதன் பிறகு மோடியை அவமதிக்கும் வகையிலும் சில நேரங்களில் நடந்துள்ளார் சசிகலா. இதுவே, சசிகலா மீது மோடிக்கு உருவான முதல் பகை.

அடுத்து கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவிடம் கூட்டணி குறித்து பேச அருண் ஜெட்லீயை அனுப்பினார் மோடி. அவரிடம் பேசி கொள்ளலாம் என்று, சாதகமான பதிலை சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா.

அதன் பிறகு, மோடியே ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது, கடுமையான நிபந்தனைகள் பலவற்றை விதித்திருக்கிறார் ஜெயலலிதா.

மோடியும்,  அந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். ஆனால், மோடியிடம் எதுவும் சொல்லாமலே, அடுத்த சிலதினங்களில் நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

இதனால் வெறுத்து போன மோடி, ஜெயலலிதா அவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி உள்ளார்.

அதில், மோடியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக, பாஜக வுடன் கூட்டணி இல்லாமல் செய்தவர் சசிகலாவே என்று தெரிய வந்துள்ளது. அதனால், சசிகலாவின் மீது மோடிக்கு இரண்டாவது முறையாக  கடுமையான கோபம் வந்து விட்டது. 

அதன் காரணமாகவே, சசிகலா, மோடியால் குறி வைத்து தாக்க படுகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், தங்கள் மீதான கோபத்தை தணிக்கும் வகையில், தினகரன் தரப்பு எவ்வளவோ சமரசம் செய்து பார்த்து விட்டது.

மோடிக்கு வேண்டிய மடாதிபதி ஒருவர் மூலமாகவும், மோடியின் விருப்பத்திற்கு இணங்க செயல்பட தயாராக இருக்கிறோம் என்றும் தினகரன் தரப்பில் மோடியின் மனதை கரைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சசிகலா மீது மட்டும் தான் கோபமே தவிர, தினகரன் மீது அல்ல. அவரை அரசியலை விட்டு ஒதுங்கி கொள்ள சொல்லுங்கள், நாங்களும் எங்கள் நடவடிக்கையை நிறுத்தி கொள்கிறோம் என்று மோடி தரப்பில் மடாதிபதியிடம் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், அதையும் மீறி ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டதன் காரணமாகவே, இவ்வளவு சிக்கலுக்கும் ஆளாகி இருக்கிறார் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.