சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தைப் பற்றி பேசியதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து அப்போது விவாதிக்கப் படவில்லை என்றும், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதை பிரதமர் தவிர்த்த தாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். 

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.  முன்னதாக நேற்று இரவு நடந்த கடற்கரை புல்வெளி இரவு விருந்தில் சீனா அதிபர் மற்றும் அதிகாரிகள் தமிழக உணவுகளை ரசித்து உண்டனர்.  மாமல்லபுரத்திலிருந்து  இரவு 8 மணிக்கு சென்னை திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  இரு நாட்டுத் தலைவர்களும் சுவாரஸ்யமாக பேசியதில் இரவு 10 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது.  இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் மோடி வழங்கிய தேனீர் விருந்தில் சீன அதிபர்  கலந்து கொண்டார். 

கோவலத்தில் நடைபெற்ற இரு நாட்டு அதிகாரிகளிக்கிடையேயான இவ்உயர்மட்ட பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் மோடி சீன அதிபர் சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு ஜி ஜின்பிங் சீனா வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்கள் இடையிலான பேச்சு வார்த்தையின் போது தீவிரவாதத்தைப் பற்றி விவாதித்ததாகவும் அவர் கூறினார்.  அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து  பேசப்படவில்லை என்றும் தெரிவித்த அவர்,  காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால்  ஜி ஜின்பிங் உடன் பகிர்ந்து கொள்வதை பிரதமர் தவிர்த்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.  விரைவில் இந்திய பிரதமர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.