முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி நடிகை கவுதமி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறியருந்தார். இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஒருவர் இது தொடர்பாக கேட்டபோது, அப்படி ஒரு கடிதமே வரவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரியவந்துள்ளது.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
இந்நிலையில் நடிகை கவுதமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த டிசம்பர் 9-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதியதாக டுவிட்டரில் தெரிவித்து கடிதத்தையும் பதிவிட்டு இருந்தார். இது ஊடகங்களிலும் செய்தியாக வந்தன.

அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் மரணம் சோகமானது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நிலவிய சூழல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை, அவர் தேறி வந்தது, திடீர் என இறந்தது என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை காணவந்த தலைவர்கள், பிரபலங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவரை சந்திக்க விடாமல் தடுத்தது யார். மக்கள் விரும்பும் தலைவி விஷயத்தில் இந்த ரகசியம் ஏன்? யார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது. யார்? யார்? ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து யார் முடிவுகள் எடுத்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் மக்களுக்கு யார் பதில் அளிக்கப்போவது? இது போன்று பல கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழுகிறது. அவர்கள் சார்பில் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன். நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன் என கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், உண்மையில் கடிதம் அனுப்பபட்டதா? என்று தெரிந்துக்கொள்ள 12.12.2016 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு நடிகை கௌதமி அவர்கள் அனுப்பிய கடித நகல் கோரி தீபக் என்பவர் மனு செய்து இருந்தார். இதை தீபக் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 27.1.2017 தேதியிட்ட கடிதம் மூலம் நடிகை கவுதமி எழுதிய கடிதத்துக்கு, NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இதனால், கௌதமி கூறியது பொய்யா? என்ற சந்தேகம் எழுகிறது. .
தவறான முகவரிக்கு நடிகை கவுதமி கடிதம் அனுப்பினாரா? அல்லது விளம்பரத்திற்கு செய்தாரா? என்பது தெரியவில்லை. அப்படி என்றால், ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக கவுதமி ஏன் கூற வேண்டும்?. அப்போது அவர் எழுதிய கடிதம் பொய்யா?, ஏன் அவ்வாறு செய்தார்? என்பது தெரியவில்லை.
